லக்கிம்பூர் கேரி கொலையாளிக்கு 8 வார நிபந்தனை ஜாமீன் – உச்சநீதிமன்றம் உத்தரவு
மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு விவசாய நிலங்களுக்காக ஒரு சட்டத்தை உருவாக்கியது. அந்த சட்டத்தை எதிர்த்து உத்திரபிரதேசத்தில் உள்ள லக்கிம்பூர் கேரி (Lakhimpur Kheri) கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌர்யா (Keshav Prasad Maurya) கீழ் நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அஜய் மிஷ்ராவின் (Ajay Mishra) மகன், போராட்டம் நடைபெறும் வழியாக செல்லும் தகவல் அறிந்த லக்கிம்பூர் கேரி (Lakhimpur Kheri) கிராமத்தின் மக்கள் அவர் செல்லும் வழியில் போராட்டம் செய்ய முற்பட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை சற்றும் பொருட்படுத்தாமல் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வாகனத்தை ஏற்றி சென்றார். இந்த கொடூர செயலால் 8 பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். இந்த கோர விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவாக இருந்த அவர் பின் சரண் அடைந்தார். முன்னதாக அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது பின் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி 2022 ஆம் ஆண்டு அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரபிரதேச உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேல்முறையீடு செய்யாமல் அம்மாநில காவல் துறை அமைதி காத்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களே அந்த ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவில் அவரின் ஜாமீன் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அவர் மீது 147, 148, 149, 302, 307, 326, 427, 120B of IPC மற்றும் பிரிவு 177 – மோட்டார் வாகன சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
தற்போது உச்ச நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. அந்த ஜாமீனில் அவர் டெல்லி மற்றும் உத்திரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்க கூடாது எனவும், மேலும் வழக்கு தாக்கல் செய்தவர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி மிரட்ட கூடாது எனவும் நிபந்தனையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த நிபந்தனை ஜாமீன் 8 வாரங்கள் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ளது.