மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இ-பெயில் பாண்ட் அறிமுகம்

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் இ-பெயில் பாண்ட் அறிமுகம்
குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வருவதற்கு உபயோகப்படுத்தப்படும் பிணைச்சீட்டு இல்லாமல் டிஜிட்டல் முறையில் இ-பெயில் பாண்ட் நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் குற்றவாளிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தவுடன் கால தாமதமின்றி சிறையில் இருந்து வெளியே வந்துவிடலாம்.
முதலில் பிணைச்சீட்டு (Bail Bond) என்றால் என்னவென்று தெரிந்து கொள்வோம்; சிறையில் இருக்கும் குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்து பிணையில் வெளியே வருவதற்கு அத்தாட்சியாக பயன்படுவது தான் பிணைச்சீட்டு (Bail Bond). ஒரு ஜாமீன் மனு மீது நீதிபதி அவர்கள் நிபந்தனைகளுடன் பிணையில் வெளியே வருவதற்கு உத்தரவு செய்வார். அந்த நிபந்தனைகளில் Surety எனப்படும் உத்திரவாதம் கொடுக்க வேண்டும். குற்றவாளிக்கு உத்திரவாதம் அளிக்கக்கூடிய அந்த நபர்கள் Surety Form-ல் அவர்களின் தகவல்களை நிரப்ப வேண்டும். மேலும் பிணைச்சீட்டில் உத்திரவாதம் அளிக்க கூடிய நபர்கள் கையெழுத்து இட வேண்டும், பின் அந்த படிவங்கள் அனைத்தையும் Head Clerk அவர்களால் சரிபார்க்கப்பட்டு பின் நீதிபதியிடம் கையெழுத்து பெற வேண்டும். நீதிபதி அவர்கள் கையெழுத்திட்ட அந்த பிணைச்சீட்டு (Bail Bond) நீதிமன்ற பணியாளர் ஒருவர் மூலம் குற்றவாளி இருக்கும் சிறை கண்காணிப்பாளருக்கு சென்றடையும். சிறை கண்காணிப்பாளர் அந்த பிணைச்சீட்டை (Bail Bond) சரிபார்த்து அதன்பிறகு குற்றவாளியை சிறையில் இருந்து வெளியே அனுப்புவர். இவ்வளவு நடைமுறைகள் இருப்பதால் சிறையில் இருக்கும் குற்றவாளிக்கு ஜாமீன் கிடைத்தும் வெளியில் வருவதற்கு காலதாமதம் ஆகிவிடுகிறது.
இதனை கருத்தில் கொண்டு மெட்ராஸ் உயர்நீதிமன்றம் குற்றவாளிகள் ஜாமீனில் வெளியே வருவதற்கு உபயோகப்படுத்தப்படும் பிணைச்சீட்டிற்கு பதிலாக இ-பெயில் பாண்ட் நடைமுறையை கொண்டுவந்துள்ளது. இந்த புதிய நடைமுறை மூலம் நீதிபதி கையெழுத்து செலுத்தியவுடன் நேரடியாக சம்மந்தப்பட்ட சிறையின் கண்காணிப்பாளருக்கு இணையதளம் மூலம் சென்றடையும். இதனால் கால விரயம் குறையும் மேலும் குற்றவாளிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தவுடன் கால தாமதமின்றி சிறையில் இருந்து வெளியே வந்துவிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *