மருத்துவர்களின் அலட்சியம் – இழப்பீடு நிச்சயம் – உச்ச நீதிமன்றம்

HARNEK SINGH VS GURMIT SINGH / 2022 (SC) 511 / CA 4126-4127/2022 / 18 MAY 2022

CORAM: JUSTICES UU LALIT, S.RAVINDRA BHAT & PS NARASHIMA 

பஞ்சாப்பை சேர்ந்த Mrs.Manjit Kaur (47) என்பவர் அரசாங்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். நெடுநாட்களாக Mrs.Manjit Kaur-க்கு வயிற்று பகுதியில் தீராத வலி ஏற்பட்டு வந்தது. அதற்கு அவர் உடல் பரிசோதனை செய்ய வேண்டி Preet Surgical Centre & Maternity Hospital-ன் நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர் (Laparoscopic Surgeon) தன் கணவருடன் சந்தித்து ஒலி மூலம் நுட்பமாக ஆராய்ந்து (Ultra Scan) பித்தப்பை (Gall Bladder) கற்கள் இருந்தது தெரியவந்தது. வலி தீர்வதற்கு கற்களை அகற்ற வேண்டும் என்று Mrs.Manjit Kaur-க்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரை செய்தார். மேலும் அவ்வாறு அகற்ற அறுவை சிகிச்சை செய்வதற்கு முன்பாக மேலும் பல உடல் பரிசோதனைகளை செய்ய பரிந்துரைக்கப்பட்டது. மருத்துவரின் பரிந்துரைப்படி பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டு முடிவுகளை மருத்துவர்களிடம் காண்பித்தபோது, பரிசோதனைகளின் முடிவுகள் தெளிவாக வரவில்லை எனவும் தான் குறிப்பிட்டு சொல்லும் மருத்துவ ஆய்வகத்தில் ஏற்கனவே செய்த சோதனைகளை மீண்டும் செய்யும்படி பரிந்துரைக்கப்பட்டது. அதேபோல் மீண்டும் ஒரு உடல் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் அறுவை சிகிச்சை நிபுணரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கடந்த 28.07.2004 அன்று நுண்துளை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையின் பித்தப்பை உடலில் இருந்து அகற்றப்பட்டதாகவும், வயிற்றில் இருந்து சில கழிவுகள் வெளியேறும்படி ஒரு வடிகால் வயிற்றில் பொருத்தப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பின்பும் Mrs.Manjit Kaur தீராத வயிற்று வலியில் இருந்து விடுபடவில்லை, அதேநேரம் வடிகால் மூலமாக பச்சையும், பழுப்பும் சேர்ந்த நிறத்தில் வயிற்று பகுதியில் இருந்து ஒரு திரவம் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. இதனை மருத்துவரிடம் முறையிட்ட போது அவ்வாறு அறுவை சிகிச்சைக்கு பின் திரவம் வெளியேறுவது என்பது நடைமுறை தான் என்று தெரிவிக்கப்பட்டது. Mrs.Manjit Kaur அறுவை சிகிச்சைக்கு பிறகு வயிற்று வலியிலிருந்து விடுபடலாம் என்று எண்ணியிருந்தவருக்கு வயிற்று வலி சிறிதும் குறையவில்லை அதற்கு மாறாக வலி அதிகமானதுடன் மூச்சு விடுவதற்கும் சிரமமாகி போனது. Mrs.Manjit Kaur படும் சிரமங்களை கண்ட அவரது கணவர் Harnek Singh நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணரிடம் இரண்டாவது வேறு ஒரு மருத்துவரிடம் அல்லது வேறு ஒரு மருத்துவமனைக்கு அணுகி கேட்கலாம் என்று சொன்னதற்கு அவரின் கோரிக்கை ஏற்கப்படவில்லை, மறுக்கப்பட்டு விட்டது. ஆதலால் வேறு வழியின்றி Mrs.Manjit Kaur-க்கு அதே மருத்துவமனையில் மருத்துவம் பார்க்க வேண்டி ஆனது. மேலும் நோயாளியின் கோரிக்கை மறுக்கப்பட்டு பாதுகாப்பான ஒரு மருத்துவம் அளிக்கப்படுவதாகவும், சிறந்த முறையில் குணப்படுத்திட முடியும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது மொத்தத்தில் நோயாளியின் கோரிக்கை மறுக்கப்பட்டுவிட்டது.

    காலம் கடந்து Mrs.Manjit Kaur-க்கு உடல்நிலை மிக மோசமாக ஆன சூழ்நிலையில் அவரது கணவரின் தொடர்ச்சியான போராட்டம் காரணமாக வேறு ஒரு மருத்துவமனைக்கு சேர்க்க ஒப்புக்கொள்ளப்பட்டது. 30.07.2004 அன்று Dayanand Medical College and Hospital, Ludhiana மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், அங்கும் பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டது. முடிவில்   Mrs.Manjit Kaur-க்கு உடல் ரீதியாக பல்வேறு உபாதைகள் உள்ளதாகவும் ஆதலால் தான் அறுவை சிகிச்சைக்கு பிறகும் சிரமப்படுகிறார் என்று அவரது கணவரிடம் கூறப்பட்டது. இதில் கவனிக்கத்தக்க கருத்து என்னவென்றால் இரண்டு மருத்துவமனைகளிலும் நோயாளிகளின் கோரிக்கை ஏற்க்கப்படவில்லை. என்ன வகையான மருத்துவம் பார்க்கப்படுகிறது, எதற்கான மருத்துவம் பார்க்கப்படுகிறது, அதன் விளைவுகள் என்ன? போன்ற விவரங்கள் ஏதும் நோயாளியிடமோ அவரது கணவரிடமோ தெரிவிக்காதது கவனிக்கத்தக்க கருத்து ஆகும்.

    02.08.2004 அன்று காரணங்கள் ஏதும் சொல்லப்படாமல் மேலும் ஒரு அறுவை சிகிச்சை Mrs.Manjit Kaur-க்கு மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சைக்கு பின்பு Mrs.Manjit Kaur-ன் உடல்நிலை மிகவும் மோசமடைந்து உடல் உறுப்புகள் அனைத்தும் செயல் இழக்க தொடங்கின அதோடு மூச்சு விடுவதற்கு சிரமப்படும் நிலைக்கு சென்றுவிட்டார். தொடர் சிகிச்சையின் போதே 11.08.2004 அன்று Mrs.Manjit Kaur இறந்துவிட்டார்.

    இறப்பிற்கு சரியான காரணம் அறிய பிரேத பரிசோதனை கோரிக்கை மருத்துவமனை நிர்வாகத்திடம் கோரப்பட்டது. ஆனால் காரணம் ஏதுமின்றி எந்த விளக்கமும் இன்றி Harnek Singh கோரிக்கை மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவத்தை பாடமாக கொண்டு வேறு யாருக்கும் அவ்வாறு நடக்க கூடாது என்று Harnek Singh (State Consumer Dispute and Redressal Commission)-ல் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார் அவரின் கோரிக்கை ஏற்கப்பட்டு ரூ.15,40,000/- நஷ்ட ஈடாக 2 மருத்துவமனையின் மருத்துவர்களும் கொடுக்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்புக்கு எதிராக மருத்துவர்களால் National Consumer Dispute and Redressal Commission நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது அதில் மருத்துவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வெளிவந்தது. இதற்கு முன்னரே State Consumer Dispute and Redressal Commission-ல் புகார் கொடுக்கும் பொழுதே Medical Commission of India-ம் மருத்துவர்களுக்கு எதிராக புகார் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தது. அதில் மருத்துவர்களின் கவனக்குறைவு மற்றும் நோயாளிகளுக்கு வெளிப்படை தன்மையற்ற நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கடுமையான எச்சரிக்கை இரண்டு மருத்துவர்களுக்கும் கொடுக்கப்பட்டது. 

    தேசிய நுகர்வோர் தீர்ப்பாயத்தின் முடிவினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய மாண்புமிகு உச்ச நீதிமன்றமானது Harnek Singh வாதங்களை ஏற்று அவர் பாதிப்படைந்த சூழலை புரிந்து அவருக்கு ஏற்பட்ட இழப்பினை ஈடு செய்யும் விதமாக Preet Surgical Centre & Maternity Hospital, Dayanand Medical College and Hospital, Ludhiana ஆகிய மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள் மொத்தமாக ரூ.25,00,000/- இழப்பீடாக ஒப்படைக்கும்படி தீர்ப்பளித்து மேலும் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தேதியில் இருந்து சொன்ன இழப்பீடு தொகை ரூ.25,00,000/- ரூபாய்க்கு 6% வட்டி சேர்த்து தரும்படி தீர்ப்பளித்தது. இவ்வழக்கின் மொத்த கருத்தானது நோயாளிகளை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் எனவும், மருத்துவம் அளிக்கும்போது அவர்களுக்கு ஒளிவுமறைவற்ற சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் இவ்வழக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.     

 

One thought on “மருத்துவர்களின் அலட்சியம் – இழப்பீடு நிச்சயம் – உச்ச நீதிமன்றம்

  1. மிகச் சிறந்த விழிப்புணர்வு பதிவு…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *